உடல் உறுப்புகளில் இதயத்தைத் தெரிந்த அளவுக்குக் கல்லீரலின் அற்புதம் அநேகருக்கும் தெரியாத, புரியாத புதிர். ‘கல்லீரலை நம்பினோர் கைவிடப்படார்’

என்பதுதான் நடைமுறை நிஜம். உடம்பை வளர்க்கவும் உயிரைக் காக்கவும் கடைசி வரை போராடும் கல்லீரல், தனக்கு பாதிப்பு வரும்போது அது குறித்த அறிகுறிகளை ஆரம்பத்தில் காட்டாது. தன்னைத்தானே புதுப்பித்துக்கொண்டு, முடிந்தவரை செயல்படுகிற அசாத்திய சக்தி கல்லீரலுக்கு உண்டு.

அரிசி சோற்றைப் போலவே பருப்புச் சோற்றில் இருக்கும் புரதச்சத்தைச் செரித்து குளுக்கோஸாக மாற்றுவதும் கல்லீரல்தான். காய்கறிகளில் காணப்படும் வைட்டமின்களைக் குடலில் கிரகித்து ஊட்டச்சத்தாக மாற்றுவதும் இதே கல்லீரல்தான். சரி, இத்தனை சத்துக்களையும் வைத்துக்கொண்டு என்னதான் செய்கிறது கல்லீரல்? தனி ஒரு உறுப்பாக இருந்துகொண்டு, உடலின் பல உறுப்புகளைப் பாதுகாக்கும் பணியைச் செய்ய வேண்டியிருப்பதால், இந்தச் சத்துக்களை உடல் இயக்கத்துக்குத் தேவையான ‘ஆதார சக்தி’யாகப் பயன்படுத்திக் கொள்கிறது என்பதுதான் ஆச்சரியத்தின் உச்சம்!

இதயம் துடிப்பதற்குத் தேவையான சக்தி ஒரு வகை. கண் இமைப்பதற்குத் தேவையான சக்தி வேறு வகை. மூளை வளர்வதற்குத் தேவையான சத்து ஒன்று. முடி வளர்வதற்கான சத்து இன்னொரு வகை. உழைப்பதற்கும், உறங்குவதற்கும் தேவையான சக்திகள் வெவ்வேறானவை. வளரும் குழந்தைக்கும் வயதானவருக்கும் வேண்டிய சத்துக்கள் வேறுபடும்.

எந்த உறுப்புக்கு, எந்த சத்து, எந்த அளவில், எந்த நேரத்தில் தேவை என்பதை தேர்ந்த கணிப்பொறி போல் கல்லீரல்தான் தெரிந்துவைத்திருக்கிறது. அதை அந்தந்த உறுப்புக்குச் சரியான அளவில் சரியான நேரத்தில் கொடுத்து அனுப்புகிறது. அதனால்தான் வாக்கிங் போகும்போது, பாட்டு கேட்டுக் கொண்டே ‘செல்’ லையும் நோண்டுகிற மாதிரி ஒரே நேரத்தில் பல வேலைகளை நம்மால் செய்ய முடிகிறது.