பித்தநீரில் இருக்கிறது இந்த சூட்சுமம். (பித்தப்பை நீக்கப்பட்டவர்கள் நிலைமை என்ன ஆகும்? நீங்களே யோசிங்க) உணவு இரைப்பையை விட்டு இறங்கியதும், பித்தநீர் பித்தப்பையிலிருந்து வெளியேறி, முன்சிறுகுடலுக்கு வந்துவிடுகிறது. உணவிலிருக்கும் கொழுப்பைப் பிரித்துக் கூழ் போலாக்குகிறது. இப்போது அங்கு வந்து சேரும் கணைய நீரிலிருந்து ‘லைப்பேஸ் என்சைமை’ துணைக்கு அழைத்துக்கொள்கிறது. கொழுப்புச் சத்தை உறிஞ்சி எடுத்து ரத்தத்துக்குக் கொடுக்கிறது. இது போர்ட்டல் சிரை வழியாக கல்லீரலுக்குத்தான் வந்து சேருகிறது. அங்கு குளுக்கோஸ் எனும் சக்திப்பொருளாக மாற்றப்படுகிறது.

சரி, நீங்கள் சாப்பிட்டது அரிசி சோறு! (சப்பாத்தியும் சேர்த்துதான்) அது எப்படிச் செரிமானமாகிறது? அரிசி சோற்றில் உள்ள கார்போ ஹைட்ரேட்டை குளுக்கோஸாக மாற்றி ரத்தத்தில் கலப்பதற்குக் குடல் பிரதேசத்தில் ஏற்பாடு செய்வதும் கல்லீரல்தான். அதே சமயம் சாப்பிட்ட சோறு முழுவதும் குளுக்கோஸாக மாறி ரத்தத்தில் கலந்துவிட்டாலும் ஆபத்துதான்! ‘கோமா’வில் சரிந்துவிடுவீர்கள். தேவையான அளவுக்கு ரத்தத்துக்குக் குளுக்கோஸை கொடுத்துவிட்டு, மீதியை கிளைக்கோஜனாக மாற்றி, தன்னிடம் சேமித்துக்கொள்கிறது, கல்லீரல்.

கல்லீரல் மட்டும் இந்தச் சேமிப்பு வேலையைச் செய்யாவிட்டால்,இக்கால அரசியல்வாதிகள் யாரும் ‘உண்ணாவிரதம் இருக்கிறேன்’ என்று பந்தல் போட்டு உட்கார முடியாது. அதேபோல் நீங்கள் விரதம் இருக்கும்போதும், வீட்டில் கோபித்துக்கொண்டு ஒருநாள், இரண்டு நாள் சாப்பிடாமல் இருக்கும் போதும், வயிறு பசித்து உணவுக்காக ‘அழும்’. அப்போது, ‘இந்தா நீ கேட்ட உணவு’ என்று தன் சேமிப்பில் இருக்கும் கிளைக்கோஜனை மறுபடியும் குளுக்கோஸாக மாற்றித்தரும் வள்ளலும் கல்லீரல்தான்! (நவீன மருத்துவத்தின் நீரழிவு மாத்திரை சாப்பிடுபவர்களுக்கு இது பொருந்தாது) ஏனெனில் இனிப்பு நீருக்காக சாப்பிடும் மாத்திரைகள் நம் உடம்பில் உள்ள அனைத்து இனிப்பையும் சிறுநீரின் வழியாக வெளியேற்றி விடுகிறது, அதனால் தான் நவீன மருந்து சாப்பிடும் இனிப்பு நீர் பிரச்சனை உள்ளவர்கள் ஒரு வேளை சாப்பிடாவிட்டாலும் கை, கால்கள் நடுக்கம் ஏற்பட்டு ஒருவழியாகி உடனடியாக இனிப்பை சாப்பிட்டு தங்களை ஆசுவாசப் படுத்தி கொள்கின்றனர்

உடம்பின் அவசரத்துக்கும் ஆபத்துக்கும் அயராமல் சத்துக்களை தறுவது கல்லீரல்! வறுமை, வறட்சி, பஞ்சம் போன்ற காலங்களில் பலர் மாதக் கணக்கில்கூட சாப்பிடாமல் இருக்க வேண்டிய பரிதாப நிலை ஏற்படுவது உண்டு. அப்போது அவர்களுக்கு நாட்கணக்கில் சக்தியைத் தருமளவுக்கு கார்போஹைட்ரேட், புரதம் போன்ற சத்துக்கள் கிடைக்காது.

இதுபோன்ற சமயங்களில் உடலில் படிந்திருக்கும் கொழுப்பிலிருந்து சத்தை எடுத்து குளுக்கோஸாக மாற்றி உடலுக்குத் தேவையான சக்தி கிடைக்க வழிசெய்து, உயிர் காக்கும் போராளியாக மாறுகிறது கல்லீரல். சாப்பிட்ட உணவு மட்டுமல்ல, குடித்த மது, விழுங்கிய மாத்திரை, சுவாசித்த புகை, தலைக்குத் தேய்த்த தைலம், தவறுதலாகக் குடித்துவிட்ட விஷம்... இப்படி எல்லாமே கல்லீரலுக்குத்தான் போகிறது.

அன்னப்பறவை தண்ணீரையும் பாலையும் பிரிப்பது போல, இவற்றில் உள்ள ரசாயனங்களை தனித்தனியாகப் பிரித்து, ‘நல்லது எது? கெட்டது எது?’ எனத் தெரிந்து, மாத்திரை, மருந்து போன்ற நல்லதைச் செயல்பட வைக்கிறது. புகை, தூசி போன்ற கெட்டதைச் செயலிழக்கச் செய்கிறது. கல்லீரல் மட்டும் இந்தத் துப்புரவுப் பணியைச் செய்யாவிட்டால், நெருக்கமான சாலைகளில் வாகனங்கள் வெளிப்படுத்தும் நச்சுப் புகை மட்டுமே ஒரே வாரத்தில் நம்மைச் சாகடித்துவிடும்!

ரத்த அணுக்களின் ஆயுட்காலம் முடியும்போது, அவை மண்ணீரலுக்கு (Spleen) வந்து அழிகின்றன. அப்போது ‘பிலிரூபின்’ என்ற நச்சுப்பொருள் வெளிவருகிறது. இது ரத்தத்தில் சுற்றிக்கொண்டிருந்தால் உயிருக்கு ஆபத்தாகிவிடும். எனவே, அதை ‘விருந்து’க்கு அழைத்து, பக்குவப்படுத்தி, பித்த உப்புகளாக மாற்றிச் சிறுநீரிலும் மலத்திலும் ‘பத்திரமாக’ அனுப்பிவைக்கிறது. இந்த உபசரிப்பின் பலனால் ரத்தம் சுத்தமாகிறது; உயிர் ஆபத்து விடைபெறுகிறது.

இதுபோல், உடலில் புரதச்சத்து பயன்படுத்தப்படும்போது, ‘அமோனியா’ எனும் நச்சு வாயு கிளம்பும். இது நேரடியாக நுரையீரலுக்குப் போனால் நம் மூச்சு அடங்கிவிடும். ஆகவே, இதன் சுற்றுப்பாதையை மாற்றி அமைத்து, அதைத் தன்னிடம் வரச் செய்து, அதன் வடிவத்தை யூரியாவாக மாற்றிச் சிறுநீரகத்துக்கு அனுப்ப, அது சிறுநீரில் வெளியேறிவிடுகிறது. இந்தச் சுழற்சியில் தகராறு ஏற்பட்டால், ரத்தத்தில் யூரியா அதிகரிக்கும். அதனால் சிறுநீரகம் பழுதாகும். இதைத் தவிர்க்க, யூரியாவை கட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டிய சிரமமான பணியையும் கல்லீரல்தான் சிரமேற் கொள்கிறது.

மாறிவிட்ட நம் வாழ்க்கை முறைகளால், தெரிந்தோ, தெரியாமலோ பலதரப்பட்ட விஷப் பொருட்களும் உடம்புக்குள் நுழைவது இப்போது சகஜமாகிவிட்டது. உதாரணத்துக்குச் சில... நீங்கள் அருந்தும் தேநீரில் ‘டேனின்’ என்ற நச்சுப்பொருள் இருக்கிறது. காபியில் ‘காஃபீன்’, சிகரெட்டில் ‘நிகோடின்’, ‘டாஸ்மாக்’ சமாச்சாரத்தில் ஆல்கஹால். இவை எல்லாமே கல்லீரலுக்குப் போகாமல் நேரடியாக இதயத்தையோ, மூளையையோ அடைந்தால், இரண்டே நிமிடங்களில் மரணம் நிச்சயம். ஆனால் நடப்பதென்ன? இந்த நச்சுக்கள் கல்லீரலுக்குப் போனதும் ‘பல் பிடுங்கப்பட்ட பாம்பு மாதிரி’ விஷம் இழந்துவிடுவதால் நம்மால் உயிர் பிழைக்கமுடிகிறது.

உடலில் எங்காவது வெட்டுக்காயம் ஏற்பட்டால் ஒன்றிரண்டு நிமிடங்களில் ரத்தம் வருவது நின்று விடுகிறதல்லவா? இதற்குக் காரணம் என்ன? கல்லீரல் தயாரிக்கும் ‘புரோத்ராம்பின்’ என்ற ரசாயனம்தான். இந்த ரசாயனத்தை மட்டும் தயாரிக்க மாட்டேன் என்று கல்லீரல் ஸ்டிரைக் செய்கிறது என்று வைத்துக்கொள்வோம். அவ்வளவுதான், உடலிலிருந்து ரத்தம் முழுவதும் வெளியேறி இறந்துபோவதற்கு நாம் ஷேவ் செய்யும்போது ஏற்படும் சின்னக் கீறல் போதும்!