நம் சருமத்துக்கு அடுத்ததாக, உடலின் மிகப் பெரிய உறுப்பு கல்லீரல். வயிற்றின் மேற்புறத்தில், வலது பக்கத்தில், இலை போல் விரிந்திருக்கும் உதரவிதானத்துக்குக் கீழே, கால் இல்லாத காளான் வடிவில் கருஞ்சிவப்பு நிறத்தில் இருக்கிறது கல்லீரல். ஆங்கிலத்தில் இது ‘லிவர்’. பேச்சுத் தமிழில் ‘ஈரல்’. ஒன்றரை கிலோ எடையுள்ள கல்லீரல், மார்புக் கூட்டுக்குப் பின்புறம் பத்திரமாகப் பதுங்கியிருக்கிறது. இதயத்தைப் போலவே இதிலும் எலும்புகள் இல்லை;

தொட்டுப் பார்த்தால் பஞ்சு மாதிரி அத்தனை மிருது! மேலோட்டமாகப் பார்த்தால், ஒரே உறுப்பாகத் தெரிந்தாலும் அமைப்பு ரீதியில் வலப்பக்கம் ஒன்றும் இடப்பக்கம் ஒன்றுமாக இரண்டு பகுதிகளைக் கொண்டது. கல்லீரலின் ‘மத்தியிலிருந்து (Porta Hepatis), நான்கு அங்குல நீளத்தில் ‘பித்த நாளம்’ (Bile duct) கிளம்புகிறது. 

இது கீழ்நோக்கி இறங்கி, சிறிய வெள்ளரிப் பிஞ்சு அளவில் இருக்கும் பித்தப்பை (Gall bladder) யோடும், முன் அடைப்புக்குறி போலிருக்கும் முன்சிறுகுடலோடும் (Duodenum) கல்லீரலை இணைக்கிறது. கல்லீரலைக் குறுக்காகப் பிளந்து பார்த்தால், அதனுள்ளே ஆச்சர்யம் காத்திருக்கிறது. ஒரு தேன் கூடு போல் பல்லாயிரக்கணக்கான குழிகள் தெரிகின்றன. அவற்றுள் கோடிக்கணக்கான ‘ஹெப்பாடிக் செல்கள்’ கூடி பித்த நீரைச் (Bile) சுரக்கின்றன.